Sunday, August 16, 2015
காதல்!

சுற்றிடும் புவியை அச்சில்
சுழற்றிடும் விசையே காதல்!
வற்றரும் உயிரின் ஊற்றாய்
வளர்ந்திடும் உணர்வே காதல்!
சிற்றலை போலும் உள்ளே
சிலிர்த்திடும் மூச்சே காதல்!
பற்றறு இறைவன் தாளைப்
பற்றுதல் ஆன்மா காதல்!

உடம்பினை ஏற்கும் எல்லா
உயிர்களின் உரிமை காதல்!
நடந்திடும் நாட கத்தில்
நகர்ந்திடும் காட்சி காதல்!
தடம்பல மாறி மாறித்
தாவுதல் பொய்மைக் காதல்!
உடன்படு இருவர் உள்ளம்
ஒன்றுதல் உண்மைக் காதல்!

கண்களால் குறிப்பைக் காட்டிக்
களித்திடும் இளமைக் காதல்!
கண்களில் கருணை பொங்கக்
கனிந்திடும் முதுமைக் காதல்!
கண்களுள் நினைவைத் தேக்கிக்
காத்திடும் பிரிவின் காதல்!
கண்களும் மூடிப் போனால்
காண்பதோ முழுமைக் காதல்!

மேவிடும் அன்பு, பாசம்,
மெல்லிய நட்பு, நேசம்
காவியத் தமிழில் யாவும்
காதலாய்ப் பகரக் காண்போம்;
நீவிடும் இறகாய் வந்து,
நெஞ்சிலே நோயைக் கூட்டி,
ஆவியைக் கலக்கும் காதல்!
ஆற்றிடும் மருந்தும் காதல்!

கற்பனை வானில் நீந்திக்
கனவிலே மிதக்கும் காதல்!
சொற்களில் கவிதை கொஞ்சும்
சொர்க்கமாய் உலகம் மாறும்,
உற்றவர், பெற்றோர் முன்னால்
உண்மையை உரைக்கக் கூசும்;
அற்பமாம் கோழை தன்னுள்
அளித்திடும் வீரம் காதல்!

அடித்தளம் இல்லாக் காதல்
அவசரக் கோலம் ஆகும்!
படிப்பினை, நன்னம் பிக்கை,
பண்புடன் பொறுப்பு,வாழ்வின்
அடிப்படை ஞானம், ஓங்கும்
அன்பிலே தூய்மை, உள்ளே
நடிப்பிலா உள்ளம் சேர்ந்தால்,
நாளுமே தழைக்கும் காதல்!

வாலிப வயதில் எல்லார்
வாழ்விலும் வாராக் காதல்!
நூலிழை தூரம் தள்ளி
நோக்கிடின் காதல் காமம்!
போலியாய்க் காதல் காட்டும்
பொறுப்பிலா ஊட கத்தால்
வேலியில் பயிரைப் போன்றே
வீதியில் உழலும் காதல்!

காதலில் விழுந்து விட்டால்,
கண்களில் தூக்கம் போகும்,
காதலர் நீங்கும் போழ்தில்,
காலமும் பகையாய்த் தோன்றும்,
வேதனை வாட்டும்; சொந்த
வீட்டிலும் வெறுப்பைத் தூண்டும்;
நோதலே செய்யும்; வாழ்வை
நொடியிலே மாற்றும் காதல்!

கண்களில் புகுந்து, மெல்லக்
கருத்தினில் கலந்தே, ஓடும்
நுண்ணிய உயிரின் உள்ளே
நுழைந்திடும் ஒளியே காதல்!
தண்ணொளி நிலவின் முற்றம்
தணலெனக் தகிக்கும், இந்த
மண்ணிலே வாழும் காதல்,
மாசிலா மனிதர் மாண்பே!

நயனுடைத் தமிழ்மேல் காதல்,
நன்மைகள் எல்லாம் நல்கும்!
பயந்தநம் நாட்டை, வீட்டைப்
பண்பொடு காதல் செய்வோம்!
வியத்தகும் இயற்கை காக்க
விரும்புவோம்! உயிர்கள் போற்றும்!
உயர்ந்தநல் உழைப்பில் காதல்
ஓங்கிடின் ஒளிரும் வாழ்வே!

kaavati sinthu

காவடிச் சிந்து!

 ஓம்சக்தி ஓமெனும் ஓங்காரத் துள்ளொளிர்     தாயே! - துணை 
                                                                                       நீயே! - அருள் 
                                                                                      வாயே! -  வையம்
 ஓங்குபு கழ்மரு வூரின்கண் தோன்றிய             மாயே! -என்றும் 
 உனையேதொழ    துணையேஅடி  இணையேஎன  வினையேஅற
 ஓடியே வந்தெமைக் காப்பாய்! - நலம் 
 நாடியே இன்னருள் சேர்ப்பாய்!  

 ஆம்சக்தி நீயென்றே ஆன்மிக அன்பர்கள்   தேட - உள்ளம் 
                                                                                நாடத்  - தொண்டில் 
                                                                                கூட - மறை 
ஆன்றபொ ருள்கண்ட அன்னையுன் மந்திரம் பாடத்  - தமிழ் 
அன்பின்உயர்  பெண்ணின்புகழ் விண்ணின்நிகர்  என்னும்படி 
மன்றங்கள் தந்தஎம் குருவே! - அங்கு 
 நின்றெம்மைக் காத்திடும் திருவே!
                                                    -கவிஞர் சரோசா தேவராசு 

மும்மண்டில வெண்பா 

1)  மின்னிடும்  கன்னமோ! மென்மலர்  அன்னமோ! 
     புன்னகை  தண்முகம் பொன்எழில்  சின்னமோ!  
     கண்கயல் வண்ணமோ! கண்டதும் என்மனம் 
     இன்பமே உன்னுதே இன்று 

2) கன்னமோ! மென்மலர் அன்னமோ! புன்னகை 
    தண்முகம் பொன்னெழில் சின்னமோ! கண்கயல் 
    வண்ணமோ! கண்டதும் என்மனம் இன்பமே    
    உன்னுதே இன்றுமின்னி டும்  

    
3) மென்மலர் அன்னமோ! புன்னகை தண்முகம் 
    பொன்னெழில் சின்னமோ! கண்கயல் வண்ணமோ! 
    கண்டதும் என்மனம் இன்பமே உன்னுதே   
    இன்றுமின் னிடும்கன்ன மோ!
Friday, September 9, 2011
திருவடி!
வெண்பா:
மூவரும் காணா முதலடி! பல்முணியும்,
தேவரும் தேடும் திருவடி! -மேவரும்
அன்னை பராசக்தி அன்பின் மலரடி
என்னை நடத்திடும் ஏற்று!

தாய்தந்தை தெய்வமெனத் தப்பாமல் தான்தொழும்
சேய்க்குநல் வாழ்வும் சிறக்குமே!-ஆய்ந்த
குருவின் திருவடியோ, கொண்டாடும் நம்மின்
கருவில் திருவளர்க்கும் காத்து!

இரட்டரவணை கொச்சகக் கலிப்பா :

காலனை எட்டியே காலால் உதைத்து,
மாலயனுக் கெட்டா மறைக்கெட்டாப் பேருருவாய்,
ஆலத்தை உண்டுப்பொன் அம்பலத்தே ஆடிச்
சீலம் நிறைந்தடியார் சிந்தையுள் நின்றொளிர்ந்தே,
ஞாலத்தை ஆட்டுவிக்கும் நற்பரமன் பொன்னடிகள்
கூல முதல்மணிகள் கூட்டும் பெருஞ்செல்வம்
மூல வினையறுக்கும் முத்திக்கும் வித்தாகும்
பாலம் எனக்கொண்டே பற்றுவாய் என்மதியே!

மூன்றடி மன்கேட்டு மூவு லகளந்து,
தீண்டிய கால்தூசால் திணகல்லைப் பென்னாக்கிப்,
பாண்டவரின் தூதாகிப், பாரதப் போர்முடித்த
நீண்ட திருவடியை நெஞ்சில் பதித்துவிடத்
தூண்டும் ஒளிகாட்டும்! துன்பம் அகன்றோடும்!
வேண்டிய செல்வங்கள் வெற்றியுடன் தேடிவரும்!
மீண்டும் பிறவியிலா மேலான பேறுதரும்!
ஆண்டவன் திருவடியை அன்பாய் நினைமனமே!

குறள் வெண்பா:
நான்றான தெய்வங்கள் நாடுதொறி ருந்தாலும்
ஒன்றெனவே சொல்வோம் உரத்து.
Monday, April 4, 2011
"முத்தமிழில் அரசியல்."

வரமாகக் குறள்தந்த வள்ளுவரும்

இறைமாட்சி வகுத்தால் போல,

முரசறைந்து, மன்னர்கள் முறைதவறா(து)

ஆட்சிசெய்த முந்தை நாளில்,

அரசுக்கே துணையாக, அறிவார்ந்த

சான்றோரும், அமைச்சும் கொண்டே,

உரமான அவ்வறிஞர் உரைகேட்டுக்,

குடிகாத்தே உயர்ந்தார் நன்றே!



பொற்கொல்லன், கட்டுரைத்த பொய்யுரையால்,

நிலைதிரிந்து, பொற்பின் நல்லாள்,

கற்பரசி, கண்ணகியின் காதலனாம்

கோவலனைக் "கள்வன்" என்றே,

உற்றபடி தேறாத, உரைதீர்ப்பால்,

காவலன்,இன் உயிரும் நீத்தான்.

கொற்றவனும் அரசியளில் குறைசெய்தால்,

அறம்என்றும் கூற்றாம் கண்டீர்!



கன்றிழந்த பசுவுக்காய்க், கோமகனை,

'மனு'வும்தேர்க் காலில் இட்டான்.

தன்னுடலைப் புறவிறகாய்த் தயங்காமல்

'சிபி'என்பான் தராசில் வைத்தான்.

நன்னெறியில் வழுவாது, நடுவுநிலை

தவறாது, நாளும் போற்றும்,

இன்குடிகள் உயிராக, இகல்மன்னன்

உடம்பாக, இசைத்தான் கம்பன்.



தொன்றுதொட்டு வந்தஎங்கள், தூயதமிழ்

அரசியலைத் தொடர்ந்து நோக்கின்,

இன்றிருக்கும் நிலைமையினை, இனிதென்று

சொல்லுதற்கே இடமும் உண்டோ?!

நன்று!நன்று! இவர்செய்யும் நாடகந்தான்

எத்தனையோ? நாட்டை யாள ,

ஒன்றல்ல, நூறல்ல, ஒருகோடிப்

பொய்வரைவார் ஓடும் நீரில் ,


தன்னலமே கருதாத, தலைவருந்தான்

உள்ளனரோ தகவாய்க் காக்க?!

பின்னாளில், இன்னலிலா பெருவாழ்வு

வாழ்தற்கே, பெரிதும் சேர்க்கும்

அன்னாரும்
, ஏழைக்காய் அயராமல்

உழைப்பதுபோல் அனைத்தும் செய்வார்!

பொன்னான அவர்மொழியுள் புரியாத

சூழ்ச்சிகளே புதைந்தி ருக்கும்!



இல்லாத ஏழையவன் , சிலநூறு

()ரூபாய்க்கே இடுவான் வாக்கு!

கல்லாத பாமரனோ, கட்சிபெயர்

ஒன்றேதான் கருத்தில் கொள்வான்!

நல்லவனோ, தேர்தலில் நம்பிக்கை

இழந்தவனாய், நலிந்தே போவான்!

பொல்லாத கயவர்களோ, பொய்முகத்தால்,

"ஆட்சி"எனும் பொறுப்பை ஏற்பார்!



தமிழ்நாடும் உயர்வுபெறத், தமிழினமே

மேன்மையுறத், தமிழும் ஒங்க,

அமிழ்தான வாக்குகளை, அறமுடைய

நல்லவர்க்கே, அளித்தல் வேண்டும்.

உமிபோலப் பெருகிவரும், உன்மத்தப்

பதர்களையே, உதறித் தள்ளி,

இமியளவும் சோராமல், இயன்றவரை

நன்குழைத்தால், இனிக்கும் வாழ்வே!



தன்மக்கள் மேன்மையுற, தாய்மொழியே

உணர்வூட்டும்! தழைக்கும் மாண்பே!

இன்சுற்றம் எத்தனைதான் இருந்தாலும்,

முன்னிற்பாள் ஈன்ற தாயே!

தன்மொழியை மறப்பதனால், தலைமுறையே

மாறிவிடும்! தமிழை, ஆட்சி

மன்றத்தில் அமரத்திடுவீர் ! வளமோடு

வாழ்ந்திடுவீர்! வாழ்க்கை ஓங்கும்!




அலைகள் !

அந்தி நேரம், அலைகட லோரம்,

குந்தி இருந்தேன்; குரலொன்று கேட்டேன்.

ஆர வார அலைகளி லொன்று,

பேர ழகான பெண்ணுருக் கொண்டே,

அழைத்தது,"நான்தான்! அஞ்சேல்!" என்றுநான்

அழைக்கா முன்னமென் அருகில் வந்தது.

கொஞ்சம் அச்சமும், கொஞ்சம் துணிவும்,

நெஞ்சில் உணர்ந்து, நிலைமை தெளிந்து,

"யாரைநீ? உன்பேர் யாதோ?" என்ன,

"பாரைச் சுற்றிய பரவைத் தாயின்

அன்புடை மகள்நான்; 'அலை'என் பெயரே.

என்னுடை மனத்திலே, எண்ணிலா கேள்விகள்,

விடைகள் தேடியே, விழைவுடன் வந்தேன்,

இடையூ றென்றால் இயம்புக" என்றது.

தடையே துமில்லை; தயங்கா துகேள்என,

மடைதிறந் தாற்போல், மலர்வாய் திறந்தது.

"காலங் காலமாய்க் காதலர், நண்பர்,

வேலை தேடுவோர், வீணில் திரிவோர்,

சிறியவர், பெரியவர், சிந்தனை யாளர்,

வறியவர், செல்வர், வன்மை உரைப்போர்,

எத்துணை மானுடர், எத்தனை வேற்றுமை !

அத்துணைச் செய்தியும் அகத்துள் வைத்தேன்.

என்தாய்க் கடலோ, எண்ணிலா வளங்களைத்

தன்னுளே வளர்த்துத் தகவாய்த் தருகிறாள்;

வரம்பு மீறாமல் வாழும் எங்களின்,

உரங்கள் யாவும் உங்களுக் களித்தோம்;

மனிதர் செய்யும் மாசினால், எங்கள்

புனிதம் கெட்டால், பொறுத்தல் கூடுமோ?

மூச்சுத் திணறி முட்டி மோதினேன் :

பேச்சில் ஓர்நாள் பெற்றவள் சொன்னாள்,

'நீண்டு விரிந்த நிலத்திடைச் சென்றுநீ

ஈண்டு வருக,' என்றே; நானும்,

தீண்டியே வந்தேன், திரும்பிப் பார்த்தேன்,

மூண்டதே எம்மேல் முடிவிலா பழியும்,

கால முழுவதும் கருணை பொழிந்தும்,

நீலக் கடலை நிந்தனை செய்தனர்.

ஏனிப் பழியென எனக்குரை செய்யும்.

கூனிக் குறுகும் குற்றமோ எனது?"

அலைமகள் கேட்டாள் ஆதங்க மாக!

"நிலவும் யாதும் நின்பொறுப் பன்று:

கலங்கா திருப்பாய்! கவலை மறப்பாய்!

அலகிலாத் தலைவரின் அறமிது வன்றோ ?!

வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி என்றும்

தான்குறை படுமோ? தாயே! மருகாய்!

'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்த லரிது.' என்றே

மணக்கும் குறளின் மாண்பும் நீயே!

உன்பிழை ஏதும் உலகினில் இல்லை.

உன்பணி தொடர்க! உயிர்கள் தழைக்க!

வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்;

ஆழ்ந்தே தெளிக! அருமை மகளே!"

என்றே நானும் இயம்பக் கேட்டு,

நன்றி சொல்லி, நகர்ந்தது அலையே!
Tuesday, March 29, 2011

கண்கள்


கருணை பொழியும் கண்களினால்,
காதல் சொன்னான் திருராமன்!
மருளும் கண்கள் நிலம்பார்க்க,
மயங்கி நின்றாள் மலர்ச்சீதை!
இருளும் போக்கி, ஒளிகாட்டும்!
இடரும் நீக்கிச், சுகம் கூட்டும்!
அருளும் செய்தே, நலம்ஊட்டும்
அண்ணல் இராமன் திருக்கண்கள்!

உள்ளம் உள்ளும் உணர்வுகளை,
உயிர்ப்பாய்ச் சொல்லும் நம்கண்கள்!
கள்ளம் கொண்ட மனத்தினையும்,
கசிந்தே உருகும் அன்பினையும்,
உள்ளும் புறமும் வெவ்வேறாய்
உலவும் பொய்ம்மை நெஞ்சினையும்,
தெள்ளத் தெளிவாய்க், கண்களெனும்
திரையும் காட்டிக் கொடுத்திடுமே!

மீனைப் போன்றே விழிகளினால்,
மீனாள் ஆட்சி புரிகின்றாள்!
மானைப் போலே
விழிஎன்பார்!
மணியைப் போலே ஒளிஎன்பார்!
கானக் குவளை மலரென்பார்!
கருமை வண்டின் அழகென்பார்!
ஏனை மனித அங்கங்கள்
எதற்கும் உண்டோ இப்பெருமை?

சின்னச் சின்னக் கண்களிலே,
சிரிக்கும் அழகுப் பூபபூக்கும்!
கன்னிப் பெண்ணின் கடைக்கண்கள்,
காளை மனத்தில் வலுச்சேர்க்கும்!
அன்னம் கொண்ட அருட்கண்கள்,
அழகாய்க் குடும்ப நலனகாக்கும்!
வண்ணக் கண்கள் விருந்தினரின்,
வரவைப் பார்த்து மலர்ந்திடுமே!

அகத்தில், புறத்தில் வலியென்றால்,
அடுத்துக் காட்டும் கண்கள்தாம்!
பகைக்கண் நோககைத் தெளிவதனால்,
படரும் துன்பம் விலககிடலாம்!
முகக்கண் திறந்தே உலகத்தை,
முழுதாய்ப் பார்த்து மகிழ்ந்திடலாம்!
அகக்கண் திறந்தே நல்லன்பும்,
அருளும் தழைக்க உயர்வோமே!

சரோசா தேவராசு.

Friday, February 18, 2011

பொங்குகவே!



இயற்கைத்  தாயின்  செல்வங்கள்
என்றும்  யார்க்கும்  பொதுவாகும்!
உயர்ந்தோர்  தாழ்ந்தோர்  அதற்கில்லை!
உழைத்தால்  வாழ்வில்  உயர்ந்திடலாம்!
தயக்கம்  வேண்டாம்  செயலாற்ற,
தமிழா  முந்தி  எழுந்திடுக!
முயன்றால்  சிகரம்  தொட்டிடலாம்!
 
முயற்சி  திருவாய்ப்  பொங்குகவே!

 
கண்ணில்  விரியும்  அழகெல்லாம்,
 
கடவுள்  படைத்த  கொடையாகும்!
 
மண்ணில்காற்றில்நன்னீரில் 
 
மாசைக்  குறைத்தேபயன்துய்க்கும்
 
வண்ணம்  காத்துத்  தலைமுறைக்கும் 
 
வாழும்  உரிமை  தந்திடவே,
 
எண்ணம்  தன்னில்  விழிப்புணர்வை
 
ஏற்றும்  கடமை  பொங்குகவே!

 
அன்னை  பூமி  அருள்செய்ய,
 
அன்பாய்  உழவர்  பயிர்செய்ய,
 
செந்நெல்கமுகுவாழையொடு
 
செழித்தே  விளையும்  பசுமஞ்சள்,
 
கன்னல்தெங்குகனிபலவும்
 
கனிவாய்  உதவும்  இயற்கைக்கே 
 
நன்றி  கூறும்  திருநாளில்,
 
நலமாய்ப்  பொங்கல்  பொங்குகவே!

தையின்  நாளே  தமிழர்க்குத் 
தகவாய்ப்  பிறக்கும்  புத்தாண்டு!
மையார்  மங்கை  மனம்கொண்ட,
மைந்தர்  தாமும்  அகம்மகிழக்
கையும்  கலந்துகாதலுடன்
கனியும்  இன்பம்  கண்டிடவே,
தையும்  பிறந்து  வழிபிறந்து,
தமிழர்  வாழ்வு  பொங்குகவே!

அன்பும்அறனும்  மனம்பொங்க!
அறிவும்திருவும்  மனைபொங்க!
இன்பம்  பொங்கி  இசைபொங்க!
இருப்பார்இல்லா   ஏழைக்கே,
பண்பாய்  உதவும்  நெறிபொங்க!
பல்லோர்  வாழப்  பயன்பொங்க!
நன்மை  பெருகி  வளம்பொங்க!
நாளும்  தருமம்  பொங்குகவே!

ஊரை  ஏய்த்தே  உலையிடுவோர்,
உறவை  ஏய்த்துச்  சுகம்பெறுவோர்,
பேரைப்  பெரிதாய்க்  காட்டிடவே
பிறரைத்  தள்ளி  மிதித்திடுவோர்,
யாரை  எங்கே  கவிழ்த்திடலாம்
என்றே  நாளும்  செயல்படுவோர்
வேரைக்  கிள்ளி  போகிக்கே
விருந்தாய்  வைத்துப்  பொங்குகவே!

எல்லாம்  தருவார்  இலவசமாய்,
என்றும்  தூங்கிக்  களித்திருக்க!
சொல்லும்செயலும்  வகையின்றிச்
சோம்பித்  திரிந்தே  சுகித்திருக்க!
செல்லாக்  காசாய்  மக்களையே,
சேற்றில்  புதைக்கும்  வஞ்சகரின்,
பொல்லா  முகத்தைக்  கிழித்தெறிய,
போதை  தெளிந்து  பொங்குகவே!

சுற்றம்  காத்துநட்பாய்ந்து,
சூழும்  பகையைச்  சேர்ந்தொழுகும்
ஒற்றும்  ஆய்ந்துவிழிப்புடனே,
ஒழுக்கம்  பேணிஉயர்ந்தோராம்
கற்றோர்  போற்றும்  நெறியினிலே,
காலம்  ஓர்ந்தே  உழைப்பதனால்,
அற்றம்  இல்லா  துலகேத்த,
அறிவால்  ஒளிர்ந்து  பொங்குகவே!

அமிழ்தா  னாலும்  பேழைக்குள்,
அடைத்தே  வைத்தால்  பயனாமோ?
திமிர்ந்த  தோளைக்  கொண்டாலும்,
திறனும்  திரிந்தால்  பயனாமோ?
இமியும்  சோரா துழைத்தாலும்,
இலக்கொன்   றின்றேல்  பயனாமோ?
தமிழின்  செம்மை  உலகறியத்
தமிழர்  மாண்பு  பொங்குகவே!

உலகத்  தமிழர்  கைகோர்த்தே
ஒன்றாய்  நின்றால்  உயர்ந்திடலாம்!
கலகம்  செய்தே  குளிர்காயும் 
கயவர்  தமையும்நாட்டினிலே 
உலவும்  குள்ள  நரிகளையும்
உணர்ந்தே  வாழ  வழிகண்டு,
பலரும்  போற்ற  நம்மாற்றல்
பாரில்   உயர்ந்து  பொங்குகவே!

கவிஞா் சரோசா தேவராசு