Monday, April 4, 2011
"முத்தமிழில் அரசியல்."
வரமாகக் குறள்தந்த வள்ளுவரும்
இறைமாட்சி வகுத்தால் போல,
முரசறைந்து, மன்னர்கள் முறைதவறா(து)
ஆட்சிசெய்த முந்தை நாளில்,
அரசுக்கே துணையாக, அறிவார்ந்த
சான்றோரும், அமைச்சும் கொண்டே,
உரமான அவ்வறிஞர் உரைகேட்டுக்,
குடிகாத்தே உயர்ந்தார் நன்றே!
பொற்கொல்லன், கட்டுரைத்த பொய்யுரையால்,
நிலைதிரிந்து, பொற்பின் நல்லாள்,
கற்பரசி, கண்ணகியின் காதலனாம்
கோவலனைக் "கள்வன்" என்றே,
உற்றபடி தேறாத, உரைதீர்ப்பால்,
காவலன்,இன் உயிரும் நீத்தான்.
கொற்றவனும் அரசியளில் குறைசெய்தால்,
அறம்என்றும் கூற்றாம் கண்டீர்!
கன்றிழந்த பசுவுக்காய்க், கோமகனை,
'மனு'வும்தேர்க் காலில் இட்டான்.
தன்னுடலைப் புறவிறகாய்த் தயங்காமல்
'சிபி'என்பான் தராசில் வைத்தான்.
நன்னெறியில் வழுவாது, நடுவுநிலை
தவறாது, நாளும் போற்றும்,
இன்குடிகள் உயிராக, இகல்மன்னன்
உடம்பாக, இசைத்தான் கம்பன்.
தொன்றுதொட்டு வந்தஎங்கள், தூயதமிழ்
அரசியலைத் தொடர்ந்து நோக்கின்,
இன்றிருக்கும் நிலைமையினை, இனிதென்று
சொல்லுதற்கே இடமும் உண்டோ?!
நன்று!நன்று! இவர்செய்யும் நாடகந்தான்
எத்தனையோ? நாட்டை யாள ,
ஒன்றல்ல, நூறல்ல, ஒருகோடிப்
பொய்வரைவார் ஓடும் நீரில் ,
தன்னலமே கருதாத, தலைவருந்தான்
உள்ளனரோ தகவாய்க் காக்க?!
பின்னாளில், இன்னலிலா பெருவாழ்வு
வாழ்தற்கே, பெரிதும் சேர்க்கும்
அன்னாரும் , ஏழைக்காய் அயராமல்
உழைப்பதுபோல் அனைத்தும் செய்வார்!
பொன்னான அவர்மொழியுள் புரியாத
சூழ்ச்சிகளே புதைந்தி ருக்கும்!
இல்லாத ஏழையவன் , சிலநூறு
(உ)ரூபாய்க்கே இடுவான் வாக்கு!
கல்லாத பாமரனோ, கட்சிபெயர்
ஒன்றேதான் கருத்தில் கொள்வான்!
நல்லவனோ, தேர்தலில் நம்பிக்கை
இழந்தவனாய், நலிந்தே போவான்!
பொல்லாத கயவர்களோ, பொய்முகத்தால்,
"ஆட்சி"எனும் பொறுப்பை ஏற்பார்!
தமிழ்நாடும் உயர்வுபெறத், தமிழினமே
மேன்மையுறத், தமிழும் ஒங்க,
அமிழ்தான வாக்குகளை, அறமுடைய
நல்லவர்க்கே, அளித்தல் வேண்டும்.
உமிபோலப் பெருகிவரும், உன்மத்தப்
பதர்களையே, உதறித் தள்ளி,
இமியளவும் சோராமல், இயன்றவரை
நன்குழைத்தால், இனிக்கும் வாழ்வே!
தன்மக்கள் மேன்மையுற, தாய்மொழியே
உணர்வூட்டும்! தழைக்கும் மாண்பே!
இன்சுற்றம் எத்தனைதான் இருந்தாலும்,
முன்னிற்பாள் ஈன்ற தாயே!
தன்மொழியை மறப்பதனால், தலைமுறையே
மாறிவிடும்! தமிழை, ஆட்சி
மன்றத்தில் அமரத்திடுவீர் ! வளமோடு
வாழ்ந்திடுவீர்! வாழ்க்கை ஓங்கும்!
வரமாகக் குறள்தந்த வள்ளுவரும்
இறைமாட்சி வகுத்தால் போல,
முரசறைந்து, மன்னர்கள் முறைதவறா(து)
ஆட்சிசெய்த முந்தை நாளில்,
அரசுக்கே துணையாக, அறிவார்ந்த
சான்றோரும், அமைச்சும் கொண்டே,
உரமான அவ்வறிஞர் உரைகேட்டுக்,
குடிகாத்தே உயர்ந்தார் நன்றே!
பொற்கொல்லன், கட்டுரைத்த பொய்யுரையால்,
நிலைதிரிந்து, பொற்பின் நல்லாள்,
கற்பரசி, கண்ணகியின் காதலனாம்
கோவலனைக் "கள்வன்" என்றே,
உற்றபடி தேறாத, உரைதீர்ப்பால்,
காவலன்,இன் உயிரும் நீத்தான்.
கொற்றவனும் அரசியளில் குறைசெய்தால்,
அறம்என்றும் கூற்றாம் கண்டீர்!
கன்றிழந்த பசுவுக்காய்க், கோமகனை,
'மனு'வும்தேர்க் காலில் இட்டான்.
தன்னுடலைப் புறவிறகாய்த் தயங்காமல்
'சிபி'என்பான் தராசில் வைத்தான்.
நன்னெறியில் வழுவாது, நடுவுநிலை
தவறாது, நாளும் போற்றும்,
இன்குடிகள் உயிராக, இகல்மன்னன்
உடம்பாக, இசைத்தான் கம்பன்.
தொன்றுதொட்டு வந்தஎங்கள், தூயதமிழ்
அரசியலைத் தொடர்ந்து நோக்கின்,
இன்றிருக்கும் நிலைமையினை, இனிதென்று
சொல்லுதற்கே இடமும் உண்டோ?!
நன்று!நன்று! இவர்செய்யும் நாடகந்தான்
எத்தனையோ? நாட்டை யாள ,
ஒன்றல்ல, நூறல்ல, ஒருகோடிப்
பொய்வரைவார் ஓடும் நீரில் ,
தன்னலமே கருதாத, தலைவருந்தான்
உள்ளனரோ தகவாய்க் காக்க?!
பின்னாளில், இன்னலிலா பெருவாழ்வு
வாழ்தற்கே, பெரிதும் சேர்க்கும்
அன்னாரும் , ஏழைக்காய் அயராமல்
உழைப்பதுபோல் அனைத்தும் செய்வார்!
பொன்னான அவர்மொழியுள் புரியாத
சூழ்ச்சிகளே புதைந்தி ருக்கும்!
இல்லாத ஏழையவன் , சிலநூறு
(உ)ரூபாய்க்கே இடுவான் வாக்கு!
கல்லாத பாமரனோ, கட்சிபெயர்
ஒன்றேதான் கருத்தில் கொள்வான்!
நல்லவனோ, தேர்தலில் நம்பிக்கை
இழந்தவனாய், நலிந்தே போவான்!
பொல்லாத கயவர்களோ, பொய்முகத்தால்,
"ஆட்சி"எனும் பொறுப்பை ஏற்பார்!
தமிழ்நாடும் உயர்வுபெறத், தமிழினமே
மேன்மையுறத், தமிழும் ஒங்க,
அமிழ்தான வாக்குகளை, அறமுடைய
நல்லவர்க்கே, அளித்தல் வேண்டும்.
உமிபோலப் பெருகிவரும், உன்மத்தப்
பதர்களையே, உதறித் தள்ளி,
இமியளவும் சோராமல், இயன்றவரை
நன்குழைத்தால், இனிக்கும் வாழ்வே!
தன்மக்கள் மேன்மையுற, தாய்மொழியே
உணர்வூட்டும்! தழைக்கும் மாண்பே!
இன்சுற்றம் எத்தனைதான் இருந்தாலும்,
முன்னிற்பாள் ஈன்ற தாயே!
தன்மொழியை மறப்பதனால், தலைமுறையே
மாறிவிடும்! தமிழை, ஆட்சி
மன்றத்தில் அமரத்திடுவீர் ! வளமோடு
வாழ்ந்திடுவீர்! வாழ்க்கை ஓங்கும்!
அலைகள் !
அந்தி நேரம், அலைகட லோரம்,
குந்தி இருந்தேன்; குரலொன்று கேட்டேன்.
ஆர வார அலைகளி லொன்று,
பேர ழகான பெண்ணுருக் கொண்டே,
அழைத்தது,"நான்தான்! அஞ்சேல்!" என்றுநான்
அழைக்கா முன்னமென் அருகில் வந்தது.
கொஞ்சம் அச்சமும், கொஞ்சம் துணிவும்,
நெஞ்சில் உணர்ந்து, நிலைமை தெளிந்து,
"யாரைநீ? உன்பேர் யாதோ?" என்ன,
"பாரைச் சுற்றிய பரவைத் தாயின்
அன்புடை மகள்நான்; 'அலை'என் பெயரே.
என்னுடை மனத்திலே, எண்ணிலா கேள்விகள்,
விடைகள் தேடியே, விழைவுடன் வந்தேன்,
இடையூ றென்றால் இயம்புக" என்றது.
தடையே துமில்லை; தயங்கா துகேள்என,
மடைதிறந் தாற்போல், மலர்வாய் திறந்தது.
"காலங் காலமாய்க் காதலர், நண்பர்,
வேலை தேடுவோர், வீணில் திரிவோர்,
சிறியவர், பெரியவர், சிந்தனை யாளர்,
வறியவர், செல்வர், வன்மை உரைப்போர்,
எத்துணை மானுடர், எத்தனை வேற்றுமை !
அத்துணைச் செய்தியும் அகத்துள் வைத்தேன்.
என்தாய்க் கடலோ, எண்ணிலா வளங்களைத்
தன்னுளே வளர்த்துத் தகவாய்த் தருகிறாள்;
வரம்பு மீறாமல் வாழும் எங்களின்,
உரங்கள் யாவும் உங்களுக் களித்தோம்;
மனிதர் செய்யும் மாசினால், எங்கள்
புனிதம் கெட்டால், பொறுத்தல் கூடுமோ?
மூச்சுத் திணறி முட்டி மோதினேன் :
பேச்சில் ஓர்நாள் பெற்றவள் சொன்னாள்,
'நீண்டு விரிந்த நிலத்திடைச் சென்றுநீ
ஈண்டு வருக,' என்றே; நானும்,
தீண்டியே வந்தேன், திரும்பிப் பார்த்தேன்,
மூண்டதே எம்மேல் முடிவிலா பழியும்,
கால முழுவதும் கருணை பொழிந்தும்,
நீலக் கடலை நிந்தனை செய்தனர்.
ஏனிப் பழியென எனக்குரை செய்யும்.
கூனிக் குறுகும் குற்றமோ எனது?"
அலைமகள் கேட்டாள் ஆதங்க மாக!
"நிலவும் யாதும் நின்பொறுப் பன்று:
கலங்கா திருப்பாய்! கவலை மறப்பாய்!
அலகிலாத் தலைவரின் அறமிது வன்றோ ?!
வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி என்றும்
தான்குறை படுமோ? தாயே! மருகாய்!
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.' என்றே
மணக்கும் குறளின் மாண்பும் நீயே!
உன்பிழை ஏதும் உலகினில் இல்லை.
உன்பணி தொடர்க! உயிர்கள் தழைக்க!
வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்;
ஆழ்ந்தே தெளிக! அருமை மகளே!"
என்றே நானும் இயம்பக் கேட்டு,
நன்றி சொல்லி, நகர்ந்தது அலையே!
அந்தி நேரம், அலைகட லோரம்,
குந்தி இருந்தேன்; குரலொன்று கேட்டேன்.
ஆர வார அலைகளி லொன்று,
பேர ழகான பெண்ணுருக் கொண்டே,
அழைத்தது,"நான்தான்! அஞ்சேல்!" என்றுநான்
அழைக்கா முன்னமென் அருகில் வந்தது.
கொஞ்சம் அச்சமும், கொஞ்சம் துணிவும்,
நெஞ்சில் உணர்ந்து, நிலைமை தெளிந்து,
"யாரைநீ? உன்பேர் யாதோ?" என்ன,
"பாரைச் சுற்றிய பரவைத் தாயின்
அன்புடை மகள்நான்; 'அலை'என் பெயரே.
என்னுடை மனத்திலே, எண்ணிலா கேள்விகள்,
விடைகள் தேடியே, விழைவுடன் வந்தேன்,
இடையூ றென்றால் இயம்புக" என்றது.
தடையே துமில்லை; தயங்கா துகேள்என,
மடைதிறந் தாற்போல், மலர்வாய் திறந்தது.
"காலங் காலமாய்க் காதலர், நண்பர்,
வேலை தேடுவோர், வீணில் திரிவோர்,
சிறியவர், பெரியவர், சிந்தனை யாளர்,
வறியவர், செல்வர், வன்மை உரைப்போர்,
எத்துணை மானுடர், எத்தனை வேற்றுமை !
அத்துணைச் செய்தியும் அகத்துள் வைத்தேன்.
என்தாய்க் கடலோ, எண்ணிலா வளங்களைத்
தன்னுளே வளர்த்துத் தகவாய்த் தருகிறாள்;
வரம்பு மீறாமல் வாழும் எங்களின்,
உரங்கள் யாவும் உங்களுக் களித்தோம்;
மனிதர் செய்யும் மாசினால், எங்கள்
புனிதம் கெட்டால், பொறுத்தல் கூடுமோ?
மூச்சுத் திணறி முட்டி மோதினேன் :
பேச்சில் ஓர்நாள் பெற்றவள் சொன்னாள்,
'நீண்டு விரிந்த நிலத்திடைச் சென்றுநீ
ஈண்டு வருக,' என்றே; நானும்,
தீண்டியே வந்தேன், திரும்பிப் பார்த்தேன்,
மூண்டதே எம்மேல் முடிவிலா பழியும்,
கால முழுவதும் கருணை பொழிந்தும்,
நீலக் கடலை நிந்தனை செய்தனர்.
ஏனிப் பழியென எனக்குரை செய்யும்.
கூனிக் குறுகும் குற்றமோ எனது?"
அலைமகள் கேட்டாள் ஆதங்க மாக!
"நிலவும் யாதும் நின்பொறுப் பன்று:
கலங்கா திருப்பாய்! கவலை மறப்பாய்!
அலகிலாத் தலைவரின் அறமிது வன்றோ ?!
வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி என்றும்
தான்குறை படுமோ? தாயே! மருகாய்!
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.' என்றே
மணக்கும் குறளின் மாண்பும் நீயே!
உன்பிழை ஏதும் உலகினில் இல்லை.
உன்பணி தொடர்க! உயிர்கள் தழைக்க!
வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்;
ஆழ்ந்தே தெளிக! அருமை மகளே!"
என்றே நானும் இயம்பக் கேட்டு,
நன்றி சொல்லி, நகர்ந்தது அலையே!
Subscribe to:
Posts (Atom)