கண்கள்
கருணை பொழியும் கண்களினால்,
காதல் சொன்னான் திருராமன்!
மருளும் கண்கள் நிலம்பார்க்க,
மயங்கி நின்றாள் மலர்ச்சீதை!
இருளும் போக்கி, ஒளிகாட்டும்!
இடரும் நீக்கிச், சுகம் கூட்டும்!
அருளும் செய்தே, நலம்ஊட்டும்
அண்ணல் இராமன் திருக்கண்கள்!
உள்ளம் உள்ளும் உணர்வுகளை,
உயிர்ப்பாய்ச் சொல்லும் நம்கண்கள்!
கள்ளம் கொண்ட மனத்தினையும்,
கசிந்தே உருகும் அன்பினையும்,
உள்ளும் புறமும் வெவ்வேறாய்
உலவும் பொய்ம்மை நெஞ்சினையும்,
தெள்ளத் தெளிவாய்க், கண்களெனும்
திரையும் காட்டிக் கொடுத்திடுமே!
மீனைப் போன்றே விழிகளினால்,
மீனாள் ஆட்சி புரிகின்றாள்!
மானைப் போலே விழிஎன்பார்!
மணியைப் போலே ஒளிஎன்பார்!
கானக் குவளை மலரென்பார்!
கருமை வண்டின் அழகென்பார்!
ஏனை மனித அங்கங்கள்
எதற்கும் உண்டோ இப்பெருமை?
சின்னச் சின்னக் கண்களிலே,
சிரிக்கும் அழகுப் பூபபூக்கும்!
கன்னிப் பெண்ணின் கடைக்கண்கள்,
காளை மனத்தில் வலுச்சேர்க்கும்!
அன்னம் கொண்ட அருட்கண்கள்,
அழகாய்க் குடும்ப நலனகாக்கும்!
வண்ணக் கண்கள் விருந்தினரின்,
வரவைப் பார்த்து மலர்ந்திடுமே!
அகத்தில், புறத்தில் வலியென்றால்,
அடுத்துக் காட்டும் கண்கள்தாம்!
பகைக்கண் நோககைத் தெளிவதனால்,
படரும் துன்பம் விலககிடலாம்!
முகக்கண் திறந்தே உலகத்தை,
முழுதாய்ப் பார்த்து மகிழ்ந்திடலாம்!
அகக்கண் திறந்தே நல்லன்பும்,
அருளும் தழைக்க உயர்வோமே!
சரோசா தேவராசு.